Sunday 27 August 2017

TI0082 - Tamizh - Sajdah tilawat (The prostration of recitation)

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

ஸஜ்தா திலாவத்


தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச் செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் குர்ஆனின் ஓரத்தில் மொத்தம் 15 வசனங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டுமென எழுதி வைத்துள்ளனர். 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார். ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.

இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகின்றார். ஆனால் ஸாத் (38வது) அத்தியாயத்திலுள்ள வசனத்தை விட்டு விடுகின்றார். ஆக இரண்டு பேருமே14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும்,அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்' என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193 வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.

“நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல்,ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்” என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்” என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.

“ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: திர்மிதீ 527

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாக உள்ளது.

மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன. அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, “இவ்வாறு செய்வது எனக்குப் போதும்” என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரீ 1067, 1070

இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷாத் தொழுத போது, இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, 'நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு
நூல்: புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்), ஸாத் (38வது அத்தியாயம்),இன்ஷிகாக் (84வது அத்தியாயம்), அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரீ 1072, 1073

ஸஜ்தா திலவாத் துஆ

தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஸஜ்தா வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
‏ "‏ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ ‏"‏ ‏.‏
   
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கல(க்)கஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி

பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் செவிப் புலனையும் பார்வைப் புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
நூல்கள்: திர்மிதீ 529, நஸயீ 1117, அபூதாவூத் 1205, அஹ்மத் 22895

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 214-218
The original source (Tamizh): 

No comments:

Post a Comment