Tuesday 1 August 2017

TI0063 - Tamizh - Jamaat (Congregational) prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை)


கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும்.

'தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 645, முஸ்லிம் 1038

'எனது உயிர் எவனது கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு, அதன்படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டு, பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகை நடத்திய பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கின்ற அவர்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரித்து விட நான் நினைத்ததுண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 644, முஸ்லிம் 1040

ஜமாஅத் தொழுகையின் ஒழுங்குகள்

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் மார்க்கச் சட்டங்கள் தெரிந்தவர்களும்,பெரியவர்களும், அதற்கடுத்து சிறியவர்களும், கடைசி வரிசையில் பெண்களும் நிற்க வேண்டும்.

என் பாட்டி முளைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 'எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்' என்று கூறினார்கள். பயன்படுத்தப்பட்டதால் கருத்துப் போய் விட்ட எங்களுடைய ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வசிக்கும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முளைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுகை நடத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 380, முஸ்லிம் 1053

'உங்களில் பருவம் அடைந்தவர்களும், அறிவில் சிறந்தவர்களும் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் 739

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்குக் கூடுதல் நன்மை உண்டு.

'பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 615, முஸ்லிம் 611

வரிசையில் இடைவெளியின்றி நெருக்கமாக இருக்க வேண்டும்
'வரிசையை நேராக்குங்கள்! ஏனெனில் வரிசைகளை நேராக்குவது தொழுகையை நிலை நாட்டுதலில் உள்ளதாகும்'என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 723, முஸ்லிம் 656

'வரிசைகளைச் சரி செய்யுங்கள்! நெருக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்! கழுத்தைக் கவனித்து சரி செய்து கொள்ளுங்கள்! முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஷைத்தான் வரிசைகளின் இடையில் சிறிய ஆட்டுக் குட்டிகளைப் போல் நுழைவதை நான் காண்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: நஸயீ 806, அபூதாவூத் 571

'உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: புகாரீ 717, முஸ்லிம் 659

இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது:


இருவர் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமும் பின்பற்றித் தொழுபவரும் முன் பின்னாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இமாமின் வலப்புறம் நிற்க வேண்டும்.
ஒரு இரவு நான் நபி (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக எனது கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 728, முஸ்லிம் 1274

ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது நிதானமாக வருதல்:


ஜமாஅத் தொழுகைக்கு வரும் போது தொழுகையில் சேர வேண்டும் என்பதற்காக அவசப்பட்டு ஓடி வரக்கூடாது. நிதானமாகவே வர வேண்டும்.
'இகாமத் சொல்வதை நீங்கள் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியான,கண்ணியமான முறையிலும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 944

கடமையான தொழுகையை நிறைவேற்றியவர் பள்ளிக்கு வந்தால்:


பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் அங்கு வந்தால் அத்தொழுகையை வேறு இடத்தில் நிறைவேற்றியிருந்தாலும் அந்த ஜமாஅத்துடன் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும்.
ஆதாரம்: திர்மிதீ 203

இகாமத் சொல்லப்பட்ட பின் வேறு தொழுகை இல்லை:


கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையைத் தொழக் கூடாது.
'(கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1160


இமாமின் தகுதிகள்:


ஜமாஅத் தொழுகையில், தொழுகை நடத்துபவர் திருக்குர்ஆனை நன்றாக ஓதக் தெரிந்தவராகவும் தொழுகையின் சட்டங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுள்ளவராகத் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

'அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். மக்கள் அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபி வழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1192

...என் தந்தை, தனது குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். இன்னின்ன தொழுகைகளை இன்னின்ன வேளைகளில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்' எனக் கூறினார். ஆகவே மக்கள் தேடிப் பார்த்த போது, நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் இருக்கவில்லை. ஆகவே (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலமா (ரலி)
நூல்: புகாரீ 4302

சுருக்கமாகத் தொழுவித்தல்:


இமாமாக இருப்பவர் தொழுவிக்கும் போது பின்பற்றித் தொழுபவரின் நிலையைக் கவனத்தில் கொண்டு தொழுகையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்திற்குச் செல்வதில்லை' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். '(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 702, முஸ்லிம்713


பின்பற்றித் தொழுபவர் பேண வேண்டியவை:


இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும்; வேறு எதையும் ஓதக் கூடாது.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!
அல்குர்ஆன்7:204

நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் 'குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!' என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162

'இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 612

இமாமை முந்தக் கூடாது:


இமாமைப் பின்பற்றித் தொழுபவர், தொழுகையின் எந்தச் செயலையும் இமாமை விட முந்திச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

'இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 623

'உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தமது தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையை கழுதையின் தலையாகவோ, அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 691, முஸ்லிம் 647


தாமதமாக வந்தால்:


ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.

'நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும்,கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 944

தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.

'தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

ரக்அத்தை அடைவது:


இமாம் ருகூவில் இருக்கும் போது ஒருவர் தொழுகையில் இணைந்தால் அந்த ரக்அத்தைத் திரும்பத் தொழத் தேவையில்லை. அவர் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார்.

'தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக யார் ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா 3/45

இமாமின் தவறைச் சுட்டிக் காட்டுதல்:


தொழுகையில் இமாம் ஏதேனும் தவறு செய்து விட்டால் ஆண்கள் ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறுவதன் மூலமும்,பெண்கள் கை தட்டுதல் மூலமும் சுட்டிக் காட்ட வேண்டும்.

'(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1203, முஸ்லிம் 641

குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால்:


இமாமிற்கு திருக்குர்ஆன் ஓதுதலில் தவறு ஏற்பட்டால் பின்னால் தொழுபவர் அதைத் திருத்திக் கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் ஓதினார்கள். அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தொழுகை முடித்தவுடன் உபை (ரலி) அவர்களிடம், 'நம்முடன் நீர் தொழுதீரா?' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்போது '(தவறைத் திருத்திக் கொடுப்பதற்கு) உம்மைத் தடுத்தது எது?' என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 773

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 145-154

The original source (Tamizh): 

No comments:

Post a Comment