Monday 31 July 2017

TI0045 - Tamizh - Fitrah, i.e the charity of Eid-ul-Fitr(Festival of breaking of the fast)

அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)!

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மீது இது கடமையாகும்
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

ஃபித்ராவின் நோக்கம்:


இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503, 1509

பெருநாள் தொழுகைக்குப் பிறகு வழங்கக்கூடாது. விரும்பினால் பெருநாளைக்கு இரண்டு, மூன்று நாளைக்கு முன்னரே வழங்கிவிடலாம்.
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நோன்புப் பெருநாள் தர்மத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் அனைவரின் சார்பாகவும் இந்த தர்மத்தை வழங்குவது கட்டாய கடமையாகும். ஒவ்வொரு நபரின் சார்பாகவும் ஒரு ஸாவு  (சுமார் இரண்டரை கிலோ அரிசி அல்லது அதற்குரிய விலை வழங்கவேண்டும்).
நோன்புப் பெருநாள் தர்மத்தை திரட்டி வசூலிக்கும் பொறுப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நியமனம் செய்திருந்தார்கள். எனவே நம்மைத் தேடி வரும் ஏழைகளுக்கு தனிப்பட்ட முறையில் வழங்காமல் கூட்டாக திரட்டி விநியோகம் செய்வது தான் நபிவழியாகும். (ஹதீஸின் சுருக்கம்)
பார்க்க : புகாரி 3275,5010

வசதியுள்ளவர்களிடமும், நடுத்தர வர்கத்தினரிடமும் நோன்புப் பெருநாள் தர்மத்தை திரட்டி ஏழைகளுக்கு வழங்குவது தான் ஏழைகளுக்கு அதிகம் நன்மை பயப்பதாகும். ஒவ்வொருவரும் தனித்தனியாக விநியோகம் செய்யும் போது குறிப்பிட்ட  சிலருக்கு மட்டும் கிடைக்கும் நிலையும் ,தேவையுடைய பலருக்கு கிடைக்காத நிலையும் ஏற்படும். ஒருவரே திரும்பத் திரும்ப பெரும் நிலை ஏற்படும்.

கூட்டாக வசூலித்து ஏழைகளை தேடிச் சென்று விநியோகம் செய்வதால் அனைத்து ஏழைகளையும் பெருநாள் தர்மம் சென்றடையும். தேவையான அளவுக்கும் அவர்களுக்கு கிடைக்க முடியும். இந்த நபிவழியை பேணுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகிறது.

The original source (Tamizh): (in the pic below):




No comments:

Post a Comment