Monday 31 July 2017

TI0061 - Tamizh - Is it correct to keep fasts for ten days from the start of Dhu'l-Hijjah month?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? 



ஷஃபீக்

பதில் :

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي

ஆஷூராவுடைய நோன்பு நோற்பது, (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆகிய இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ 2373

மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து இவ்வாறு நோன்பு வைக்கின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி ஆதாரமாக உள்ளது.

மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர்.  அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 969

இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை திக்ரு தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்டையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அதைத் தவறு என்று கூற முடியாது.          

இந்த நாட்களில் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததே இல்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இதற்கு எதிரானது அல்ல.

2012حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 2186

இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாகக் கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

The original source (Tamizh): 

No comments:

Post a Comment