Monday 31 July 2017

TI0059 - Tamizh - Funeral prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

ஜனாஸா தொழுகை


ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்குத் தொழுவித்து அடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். இறந்தவருக்கு எப்படித் தொழுவிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றைக் காண்போம்.

தொழுவிக்கும் இடம்:


பள்ளிவாசலின் உள்பகுதி, வெளிப்பகுதி, வீடுகள், திறந்த வெளி மற்றும் எந்த இடத்திலும் மய்யித்தை வைத்துத் தொழுவிக்கலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சடலத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், 'எவ்வளவு விரைவாக மக்கள் மறந்து விடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்பாத் பின் அப்தில்லாஹ்
நூல்: முஸ்லிம் 1770

தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவரை யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 1329

இந்த ஹதீஸில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கு அருகில் என்று வருகின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கி வைத்திருந்ததை அறியலாம். இந்த இடம் பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் இருந்துள்ளது. அதனால் தான் அந்த இடத்தில் வைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளார்கள்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

தொழக் கூடாத நேரங்கள்:


சூரியன் உதிக்கத் துவங்கியதிலிருந்து முழுமையாக வெளிவரும் வரை, சூரியன் உச்சத்திற்கு வந்து மேற்கின் பக்கம் சாயும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரை ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதும், அடக்கம் செய்வதும் கூடாது.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம் எனவும் இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை
சூரியன் உச்சிக்கு வந்தது முதல் சாயும் வரை
சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1511

குழந்தைக்கு ஜனாஸாத் தொழுகை:


பருவ வயதை அடையாத குழந்தையாக இருந்தால் தொழுவிக்கலாம்; தொழுவிக்காமலும் அடக்கம் செய்யலாம்.

பதினெட்டு மாதக் குழந்தையான நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போது, நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்குத் தொழுவிக்கவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்கள்: அபூதாவூத் 2772, அஹ்மத் 25101

அன்ஸாரி சிறுவர்களில் ஒரு சிறுவரின் உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1921

ஜனாஸா வைக்கும் முறை:


ஜனாஸாவை இமாமுக்கு முன்னால் குறுக்கு வசமாக வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது, ஜனாஸா கிடத்தப்பட்டது போன்று அவர்களுக்கும், கிப்லாவிற்கும் இடையில் நான் குறுக்கு வசமாகப் படுத்துக் கிடப்பேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 383

இந்த ஹதீஸிலிருந்து ஜனாஸாவைக் குறுக்கு வசமாக வைக்க வேண்டும் என்பதை அறியலாம்.

இமாம் நிற்க வேண்டிய இடம்:


ஆண் ஜனாஸாவாக இருந்தால் தலைப்பகுதியை நோக்கியும் பெண் ஜனாஸாவாக இருந்தால் வயிற்றுப் பகுதியை நோக்கியும் இமாம் நிற்க வேண்டும்.

ஒரு ஆணுடைய ஜனாஸா தொழுகையில் அனஸ் (ரலி)யுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் (மய்யித்தின்) தலையை நோக்கி நின்றார். பிறகு குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடைய ஜனாஸா கொண்டு வரப்பட்டது. 'அபூஹம்ஸாவே! இவருக்குத் தொழ வையுங்கள்' என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டனர். அப்போது கட்டிலின் நடுப்பகுதியை நோக்கி நின்றார். அப்போது அவர்களிடம் அலா பின் ஸியாத் என்பார், 'ஆண் ஜனாஸாவுக்கு தலைப்பகுதியிலும், பெண் ஜனாஸாவுக்கு இப்போது நீங்கள் நின்ற இடத்திலும் நபி (ஸல்) அவர்கள் நின்றதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்ட போது, அனஸ் (ரலி) அவர்கள், ஆம் என்று கூறினார். தொழுது முடித்ததும் '(இதை) கவனத்தில் வையுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகாலிப்
நூல்கள்: திர்மிதீ 955, இப்னுமாஜா 1483, அஹ்மத் 12640

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை:


ஆண் ஜனாஸாவும், பெண் ஜனாஸாவும் ஒரே நேரத்தில் வந்தால் கிப்லாவிலிருந்து முதலில் பெண் ஜனாஸாவும் அடுத்து ஆண் ஜனாஸாவும் வைக்கப்பட்டு, ஆண் ஜனாஸாவுக்கு அருகில் இமாம் நிற்க வேண்டும். பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை தொழுவிக்கலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒன்பது ஜனாஸாக்களுக்குச் சேர்த்து ஒரே தொழுகையாகத் தொழுதார். ஆண் ஜனாஸாக்களை இமாமை அடுத்தும் பெண் ஜனாஸாக்களை ஒரே வரிசையில் கிப்லா (திசையில் உள்ள சுவரை) அடுத்தும் வைத்தார்கள்.
(இன்னொரு தொழுகையின் போது) உம்மு குல்ஸும் என்ற பெண்ணின் ஜனாஸாவும், ஸைத் என்று அழைக்கப்படும் அவரது மகன் ஜனாஸாவும் சேர்த்து வைக்கப்பட்டன. ஸயீத் பின் அல்ஆஸ் அன்றைய தினத்தில் இமாமாக (ஆட்சியாளராக) இருந்தார். இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி), அபூகாதாதா (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். இமாமை அடுத்து சிறுவரின் ஜனாஸா வைக்கப்பட்டது. இது எனக்கு வெறுப்பாகத் தோன்றியது. உடனே நான் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி) அபூகதாதா (ரலி) ஆகியோரை நோக்கி, 'இது என்ன முறை?' என்று கேட்டேன். அதற்கு, 'இது நபிவழி' என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: நஸயீ 1952

ஜனாஸா தொழுகை தொழும் முறை:


ஜனாஸாத் தொழுகைக்காக உளூச் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு உளூச் செய்ய வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'ஜனாஸா தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போன்றதல்ல; இதில் ருகூவு, ஸஜ்தா கிடையாது. அது ஒரு துஆ தான்; எனவே இதற்கு உளூ தேவையில்லை' என்பதே இவர்களது வாதம். ஆனால் ஜனாஸா தொழுகை துஆ என்றாலும் அது தொழுகைக்கு உள்ளே தான் செய்யப்படுகின்றது.

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

இந்த ஹதீஸ் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீரில் தொடங்கி தஸ்லீமில் முடிப்பது தான். ருகூவு, ஸஜ்தா இல்லை என்பதற்காக தொழுகை இல்லை என்றாகி விடாது. ஜனாஸா தொழுகையும் தக்பீரில் ஆரம்பித்து, தஸ்லீமில் முடிப்பதாகத் தான் உள்ளது. மேலும் அல்லாஹ் தனது திருமறையில்...

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்
அல்குர்ஆன் 9:84

என்ற வசனத்தில் ஜனாஸா தொழுகை குறித்து கூறும் போது தொழுகை என்றே குறிப்பிடுகிறான். இது போல் ஹதீஸ்களிலும் தொழுகை என்றே கூறப்பட்டுள்ளன. எனவே மற்ற தொழுகைகளில் இருந்து ஜனாஸா தொழுகையைப் பிரித்துப் பார்ப்பது கூடாது. எனவே எல்லாத் தொழுகைக்கும் உளூச் செய்வது போல் இத் தொழுகைக்கும் உளூச் செய்ய வேண்டும்.

அதே போல் கிப்லாவை முன் நோக்குதல், முதல் தக்பீரில் கைகளை உயர்த்துதல், நெஞ்சின் மீது கைகளை வைத்தல் ஆகிய அனைத்தும் மற்ற தொழுகைகளில் செய்வதைப் போலவே ஜனாஸா தொழுகையிலும் செய்ய வேண்டும்.

எத்தனை தக்பீர்கள்?:


ஜனாஸாத் தொழுகையில் கூடுதலாக நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு முஸல்லா என்ற திடலுக்குச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1245, முஸ்லிம் 1733

ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவருக்காகத் தொழுவிக்கும் போது நான்கு தக்பீர்கள் (வழமையாக) சொல்பவர்களாக இருந்தனர். ஒரு முறை ஒரு ஜனாஸா தொழுகையில் ஐந்து தக்பீர்கள் சொன்னார்கள். அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் ஜந்து தக்பீர்கள் சொல்லி இருக்கிறார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா
நூல்: முஸ்லிம் 1743

ஒவ்வொரு தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்த வேண்டுமா?:


முதல் தக்பீருக்கு கைகளை உயர்த்தி, நெஞ்சின் மீது வைக்க வேண்டும். முதல் தக்பீரையும் சேர்த்து நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும். தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை. எனவே முதல் தக்பீர் தவிர மற்ற தக்பீர்களில் கைகளை உயர்த்தக் கூடாது.

தக்பீர்களுக்கிடையில் ஓத வேண்டியவை:


முதல் தக்பீருக்குப் பின்னால் ஸூரத்துல் ஃபாத்திஹாவும், இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் தொழுகையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தும், மற்ற தக்பீர்களுக்குப் பின்னால் மைய்யித்துக்காக ஹதீஸில் வந்துள்ள துஆக்களையும் ஓதவேண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார்.
அறிவிப்பவர்: தல்ஹா
நூல்: புகாரீ 1335

“ஜனாஸா தொழுகையில் இமாம் முதல் தக்பீர் கூறிய பின்னர் ஃபாத்திஹா அத்தியாயத்தை சப்தமில்லாமல் ஓதுவதும் பின்னர் மீதமுள்ள தக்பீர்களில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதும் உளப்பூர்வமான முறையில் (மய்யித்திற்கு) பிரார்த்தனை செய்வதும் குறைந்த சப்தத்தில் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும்” என்று ஒரு நபித் தோழர் அறிவித்தார்.
அறிவிப்பவர்: அபூ உமாமா
நூல்கள்: பைஹகீ 6750, ஹாகிம் 1331

ஜனாஸா தொழுகைதுஆக்கள்:


மய்யித்திற்காக துஆச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மற்றும் அவர்கள் ஓதிய துஆக்கள் ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன.

وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ، يَقُولُ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ أَنَا ذَلِكَ الْمَيِّتَ ‏.‏ قَالَ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِ هَذَا الْحَدِيثِ أَيْضًا ‏.‏

“அல்லாஹும்மக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஅஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்சில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கை(த்)தஸ் ஸவ்பல் அப்யள மினத்தனஸ். வப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅஇத்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நார்.
(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவருக்குச் சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! மேலும் இவரது நுழைவிடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும், ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையை விடச் சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக! கப்ருடைய வேதனை, நரக வேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!)
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1756

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ ‏"‏ ‏.‏

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வ காயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வ உன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பய்தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லாதஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு

(பொருள்: எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக! எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்துவிடாதே!)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னுமாஜா 1487, அபூதாவூத் 2756

ஸலாம் சொல்லுதல்:


நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறிய பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று இரு புறமும் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டு விட்டனர். தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையிலும் ஸலாம் கூறுவதும் அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: பைஹகீ 6780, தப்ரானீ கபீர் (பாகம்: 1, பக்கம்82)

(தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் திரும்பி 'அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்' என்று முகத்தைத் திருப்பி நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516

ஜனாஸாத் தொழுகையில் பெண்கள்:


ஆண்களைப் போன்று பெண்களும் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுத்துள்ளார்கள்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். தொழுவிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 192-202

The original source (Tamizh):

No comments:

Post a Comment