Monday 31 July 2017

TI0053 - Tamizh - Prayer whilst travelling:

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

பயணத் தொழுகை


கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
நூல்: முஸ்லிம் 1230

இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு,கஸ்ர் செய்யலாம்.

'மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.'
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1089, முஸ்லிம் 1228

பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும் ,இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர்,இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவுமே  தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2477

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1111

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1091, முஸ்லிம் 1263

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லி தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2334

சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை


பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்டடேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1439

எத்தனை நாட்கள்


ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபி (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

உள்ளூரில் ஜம்வு செய்தல்


ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 543

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1267

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 169-172

The original source (Tamizh): 

No comments:

Post a Comment