Monday 31 July 2017

TI0044 - Tamizh - Regarding night prayer, Qunut and 20 rak’ats

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

இரவுத் தொழுகை, குனூத் மற்றும் 20 ரக்அத்கள் பற்றி


இரவுத் தொழுகைகடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

'ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990

இரவுத் தொழுகையின் நேரம்

இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216

இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 376

நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183

நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 996

தொழும் முறை

இரவுத் தொழுகையை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரலி),
நூல்கள்: புகாரீ (991), முஸ்லீம்(1363)

ரக்அத்களின் எண்ணிக்கை

8+3 ரக்அத்கள்

'ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விடையளித்தார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1220

12+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1275

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1276

10+1 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1339

8+5 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341

9 ரக்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139

7 ரக்அத்கள்


நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139

5 ரக்அத்கள்

'வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

3 ரக்அத்கள்

'வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

1 ரக்அத்

'வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

வித்ர் தொழும் முறை

வித்ர் தொழுகையில் அனைத்து ரக்அத்களிலும் ஸூரத்துல் பாத்திஹாவும் துணை ஸூராவும் ஓத வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். முதல் ரக்ஆத்தில் ஸப்பி ஹிஸ்ம ரப்பி(க்)கல் அஃலா என்ற (87) வது அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்ஆத்தில் குல் யா அய்யுஹல் காஃபிருண் என்ற (109) வது அத்தியாயத்தையும் மூன்றாவது ரக்ஆத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் என்ற (112) வது அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர்: உபை பின் கஅப் (ரலி),
நூல்: நஸயி (1681)

மூன்று ரக்அத்கள் வித்ரு தொழும் பொது இரண்டாம் ரக்ஆத்தில் இருப்பில் அமராமல் எழ வேண்டும். மூன்றாம் ரக்ஆத்தில் மட்டும் அமர்ந்து ஓத வேண்டியவைகளை ஓதி சலாம் கொடுக்க வேண்டும்.
மூன்று ரக்அத்கள் வித்ரு தொழாதீர்கள்! மஃரிப் தொழுகைக்கு ஒப்பாக மூன்று ரக்அத்கள் வித்ரு தொழாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 25), இப்னு ஹிப்பான் (பாகம்: 6, பக்கம்: 185)

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்துகள் வித்ரு தொழுவார்கள். அதில் கடைசி ரக்ஆத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: பைஹகீ (பாகம்: 3, பக்கம்: 28)

குனூத்


வித்ர் தொழுகையின் இறுதி ரக் அத்தில் ருகூவிற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த குனூத்தை ஓத வேண்டும். குனூத் ஓதும் போது கைகளை உயர்த்துவதற்கு நபி வழியில் ஆதாரம் இல்லை.

- நபி(ஸல்) அவர்கள் ருகூவிற்கு முன்னால் குனூத் ஓதினார்கள்
  அறிவிப்பவர் : உபை பின் கஅப்(ரலி),
நூல் :நஸயீ(1681)

"நான் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தி -ஸஜ்தாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்காத போது "அல்லாஹூம்மஹ்தினீ "-என்ற குனூத்தை ஓதுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
  அறிவிப்பவர்: ஹஸன்(ரலி)
நூல் : ஹாகிம்(4800)

குனூத்தின் வாசகங்கள்

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ قَالَ الْحَسَنُ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوَتْرِ فِي الْقُنُوتِ ‏ "‏ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ ‏"‏ ‏.‏

"அல்லாஹூம்மஹ்தினீ ஃபீமன் ஹதை(த்)த வஆஃபினீ ஃபீமன் ஆஃபை(த்)த வதவல்லனீ ஃ பீமன் தவல்லை(த்)த வபாரிக்லீ ஃபீமா அஃதை(த்)த வகினீ ஷர்ர மா கலை(த்)த ஃபஇன்ன(க்)க  தக்லீ வலா யுக்ளா அலை(க்)க இன்னஹீ லாயதில்லு மன் வாலை(த்)த தபாரக்த ரப்பனா வதஆலை(த்)த”
பொருள்: இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குக் கொடுத்தவற்றில் பரக்கத் செய்வாயாக! என் விஷயத்தில் நீ விதியாகிய தீங்குகளை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! (எதையும்) விதியாக்குபவன் நீயே! உனக்கு எவரும் விதியேற்படுத்த முடியாது. நீ எவருக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா நீ பாக்கியம் பொருந்தியவன்! உயர்ந்தவன்!
   அறிவிப்பவர்: ஹசன் (ரலி)
நூல்கள்:திர்மதி(426),நஸயீ(1725)

நபி(ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹமத் 25281

நபி(ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: நஸயீ 1698

நபி(ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள்.அதில் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: நஸயீ 1699

நபி(ஸல்) அவர்கள் வயதாகி,பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை.
பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: நஸயீ 1700

20 ரக்அத்களா?


இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: பைஹகீ 4391

இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம், உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.
நூல்: முஅத்தா 233

இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள், "யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை' என்று தமது அல்மரிஃபா என்ற நூலில் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
நூல்: நஸபுர் ராயா,பாகம்: 2, பக்கம்: 154

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்?
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகின்றது,
மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்
நூல்: முஅத்தா (232)

உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில் உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?
மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி) அவர்கள் 8+3 தொழுமாறு கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது.

ஒரு வாதத்திற்கு, உமர்(ரலி) அவர்கள் 20 ரக் அத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி(ஸல்)அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது.

னவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 203-214.

The original source (Tamizh): 

No comments:

Post a Comment