Monday 31 July 2017

TI0062 - Tamizh - Qurbaani (sacrifice/offering) rulings

குர்பானிச் சட்டங்கள்


இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாறு 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்கüல் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் "பின்வரும் மக்கüடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்'' எனக் கூறப்படுகின்றது.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! (அல்குர்ஆன் 22:28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்:


குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலே, "யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆக மாட்டார்'' என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: புகாரி 955, 5556

இந்த ஹதீஸில் இருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டும் இன்றி ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய 11, 12, 13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்கüலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்
(அல்குர்ஆன் 22:28)

"குர்பானி கொடுப்பதற்கான பிராணிகளை வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்கüல் இறைவனைத் துதிப்பார்கள்' என்ற வாசகத்தைச் சிந்திக்கும் போது அறியப்பட்ட நாட்கüல் குர்பானி கொடுக்கலாம் என்பது தெரிகிறது. இன்னின்ன நாட்கள் என்று விளக்கத் தேவையில்லாத அளவுக்கு அனைவருக்கும் தெரிந்த நாட்களையே அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
ஹஜ்ஜின் கிரியைகள் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று நாட்கள் வரை நீடிக்கும். பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. இது அனைத்து ஹாஜிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே அறியப்பட்ட நாட்கள் என்பது 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் தான். சாதாரண மக்களுக்கே தெரிந்த விஷயமாக உள்ளதால் தான் அல்லாஹ் அறியப்பட்ட நாட்கள் எனக் கூறுகிறான்.

எனவே இந்த வசனத்திலிருந்து பிறை 13 மஃரிப் வரை குர்பானி கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அறுக்கும் முறை:


குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.
கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இறைவா இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 3637

முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

எத்தனை ஆடுகள்?:


நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள இரண்டு கருப்பு, வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 5554

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்து இருப்பதால் நாமும் இரண்டு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இரண்டு ஆடுகள் கொடுத்த நபி (ஸல்) ஒன்று தமக்காகவும் மற்றொன்று தமது சமுதாயத்திற்காகவும் கொடுத்ததாக அவர்களே குறிப்பிட்டதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமுதாயத்திற்காக கொடுக்கின்ற பொறுப்பு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லாததால் நாம் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும்.

ஆபிது பின் ஹிப்ஸ் என்ற நபித் தோழர் தமது குடும்பத்தார் அனைவரின் சார்பாகவும் ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து இருக்கிறார் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüன் காலத்தில் எத்தகைய நடை முறை இருந்தது என்பதைப் பின்வரும் செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
"நபி (ஸல்) அவர்கüன் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது?'' என்று அபூ அய்யூப் (ரலி) அவர்கüடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் "ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது'' என்று விடையüத்தார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூற்கள்: திர்மிதீ 1425, இப்னு மாஜா 3137, முஅத்தா921

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்குத் தடையேதுல் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: புகாரி 1718

மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு, அல்லது ஓர் ஒட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 2323

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல், விரும்பினால் 7 பேர் சேர்ந்து கூட ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் கொஞ்சமும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்:


குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கüடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அüத்தார்கள். இது புகாரியில் 1719வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்று உள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: புகாரி 1717

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக்கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் "அவற்றை நீங்களும் உண்ணுங்கள்! வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எவ்வளவு உண்ணலாம்; எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் நமக்கு நியாயம் என்று தோன்றுகின்ற அளவுக்கு நாம் எடுத்துக் கொண்டு, எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்கüல் குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்:


ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும். என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் ஏனோ தானோ என்று இருக்கக் கூடாது. மாறாக தரமுள்ளவையாக அவை இருக்க வேண்டும்.

"நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெüப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை, வெüப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெüப்படையாகத் தெரியக்கூடிய ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் " உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெüப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது:


ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
இது பற்றி நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நீங்கள் "முஸின்னத்' தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் "ஜத்அத்'தை அறுங்கள்! என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 3631

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் "யார் நமது தொழுகையைத் தொழுது விட்டுப் பலியிடுகிறாரோ அவர் தான் (குர்பானி எனும்) கடமையை நிறைவு செய்தவராவார். யார் தொழுகைக்கு முன் அறுக்கிறாரோ அவர் கிரியையைச் செய்தவராக மாட்டார்'' என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா (ரலி) "அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டேன். இது உண்ணுகின்ற பருகுகின்ற நாள் என்று விளங்கிக் கொண்டேன். எனது குடும்பத்தில் நான் அறுக்கும் ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் என்று விரும்பி தொழுகைக்கு வருவதற்கு முன்பே அறுத்து விட்டேன்'' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உமது ஆடு இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்கüடம் "ஜத்அத்' பருவத்தில் ஆட்டுக்குட்டி உள்ளது. இரண்டு ஆடுகளை விட அது எனக்கு விருப்பமானது. அதை அறுத்தால் போதுமா என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் போதும். ஆனால் உம்மைத் தவிர வேறு யாருக்கும் இது போதுமாகாது என்றார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: புகாரி 955

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு "ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634

எந்த வயதுடைய பிராணியைக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு இம் மூன்று ஹதீஸ்களில் போதுமான விளக்கம் கிடைக்கின்றது.

"முஸின்னத்' எனும் பருவம் உடையதைக் குர்பானி கொடுக்குமாறு முதல் ஹதீஸ் கட்டளையிடுகிறது.

முஸின்னத் என்பது எத்தனை வயதுடைய பிராணி என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கருத்து வேறுபாடுகள் யாவும் அர்த்தமற்றதாகவே உள்ளன.

"முஸின்னத்' என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை என்பது பொருள். அதாவது மனிதர்கள் வயதுக்கு வருவது போல், பருவமடைவது போல் கால்நடைகளும் குறிப்பிட்ட வயதில் பருவமடைகின்றன.

இங்கே வயதை விட பருவமடைவது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்கüல் பெண்கள் பருவமடைவது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் 15 வயதில் பருவமடைவார்கள். சிலர் ஒன்பது வயதிலும் பருவமடைவதுண்டு. அவர்களது நாட்டில் நிலவும் தட்பவெப்பம், குடும்பப் பாரம்பரியம், உணவுப் பழக்கம், வசதி வறுமை போன்று எத்தனையோ காரணங்களால் இந்த வித்தியாசம் ஏற்படுகின்றன.

இது போன்ற வித்தியாசம் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் உள்ளது. காஷ்மீர் ஆடுகளும் தமிழகத்து ஆடுகளும் ஒரே வயதில் பருவமடையும் என்று கூறமுடியாது.

பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதில் பருவமடையும். மாடுகள் மூன்று வயதில் பருவமடையும். ஆடுகள் இரண்டு வயதில் பருவமடையும். இந்தப் பருவத்தில் உள்ள பிராணிகள் முஸின்னத் எனப்படும். இந்தக் கணக்கு உத்தேசமானது தான். இதில் பல காரணங்களால் வித்தியாசம் ஏற்படும்.
துணை தேடுவது, பற்கள் விழுதல் போன்றவற்றை வைத்து அதற்கான அறிவு உள்ளவர்கள் பருவமடைந்ததைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

முஸின்னத்தை குர்பானி கொடுங்கள் என்றால் பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள் என்பது பொருள். நமது நாட்டில் இத்துறையில் அனுபவமுள்ளவர்கüடம் கேட்டு வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடு ஆகியவை எத்தனை வருடம் எத்தனை மாதத்தில் பருவம் அடையும் என்று அறிந்து கொள்ளலாம்.

பவருமடைவதற்கு முந்தைய நிலையில் உள்ளது "ஜத்வு' எனப்படும். அதாவது பல் விழும் பருவத்தில் உள்ளது என்பது பொருள். உறுதியான பற்கள் முளைப்பதற்காகப் பிறக்கும் போது இருந்த பற்கள் விழுந்து விடும். அவ்வாறு பல் விழ ஆரம்பித்து விட்டால் அது ஜத்வு எனப்படும். இதுவும் ஆடு, மாடு, ஒட்டகங்களுக்கு வித்தியாசப்படும். நாட்டுக்கு நாடு மாறுபடும்.
பல் விழுந்து விட்டதா என்று பார்த்து அறிந்து கொள்ளலாம். அல்லது விசாரித்து அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ ஒரு வயதில் பல் விழக்கூடும்.
முதல் ஹதீஸில் பருவம் அடைந்ததைக் குர்பானி கொடுக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சிரமமாக இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதைக் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இரண்டாவது ஹதீஸில் பல்விழும் பருவத்தில் உள்ளது உனக்கு மட்டும் தான். மற்றவருக்குப் போதாது என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். இது முந்திய ஹதீஸின் கருத்துக்கு எதிரானது போல தோன்றுகிறது.

சக்தி இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் "ஜத்வு' கொடுக்கலாம் என்று முதல் ஹதீஸும், அந்த நபித் தோழரைத் தவிர வேறு எவரும் கொடுக்கக் கூடாது என்று இரண்டாவது ஹதீஸும் கூறுகிறது.

மூன்றாவது ஹதீஸில் உக்பா என்ற மற்றொரு நபித்தோழருக்கும் அனுமதியüக்கப்பட்டுள்ளது. உம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அனுமதி கிடையாது என்ற ஹதீஸுடன் இதுவும் முரண்படுகிறது.

இரண்டாவது ஹதீஸை சிறந்தது என்ற அடிப்படையில் கூறியதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சட்டம் தெரியாத நிலையில் நீர் முன்பே அறுத்து விட்டதால் இப்போது "ஜத்வு' கொடுத்தாலும் முஸின்னத்தின் நன்மை கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது. ஜத்வு கொடுத்தால் ஜத்வு கொடுத்த நன்மை தான் கிடைக்கும் என்று புரிந்து கொண்டால் ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு ஏதுமில்லை.

இயன்றவரை பருவமடைந்ததைக் கொடுக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் அல்லது சக்தி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் பல் விழுந்த ஆட்டையேனும் கொடுக்க வேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லை.

கிடாயும் பெட்டையும்:


பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகüல் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர்.

சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். பெட்டை ஆடுகளைக் குர்பானி கொடுக்கக் கூடிய ஒருவரைக் கூட தமிழகத்தில் காண முடியாது.
இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவை தான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவையினங்கüல் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகüல் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும் தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள் நாயகத்தின் பொன் மொழிகüலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் குர்பானி பற்றிக் கூறும் போது ஜத்வு என்று ஆண்பாலில் கூறப்பட்டுள்ளது போலவே ஜத்அத் என்று பெண்பாலிலும் கூறப்பட்டுள்ளது. முஸின் என்று ஆண் பாலாகவும் முஸின்னத் என்று பெண் பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை:


ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக்கூடாது, முடிகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),
நூல் : நஸயீ 4285

தாமே அறுக்க வேண்டும்:


நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நூல்கüலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

பொது நிதியிலிருந்து குர்பானி கொடுத்தல்:


வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தியிருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது.

இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானி பிராணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி தான் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டி தானே கிடைத்துள்ளது எனக் கூறினேன். அதையே நீர் குர்பானி கொடுப்பீராக என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634

பொது நிதியிலிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


The original source (Tamizh):
ஏகத்துவம் ஜனவரி 2005, குர்பானி சட்டங்கள் (பக்கம் 22)

TI0061 - Tamizh - Is it correct to keep fasts for ten days from the start of Dhu'l-Hijjah month?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? 



ஷஃபீக்

பதில் :

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.

2373أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْأَشْجَعِيُّ كُوفِيٌّ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ عَنْ الْحُرِّ بْنِ الصَّيَّاحِ عَنْ هُنَيْدَةَ بْنِ خَالِدٍ الْخُزَاعِيِّ عَنْ حَفْصَةَ قَالَتْ أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِيَامَ عَاشُورَاءَ وَالْعَشْرَ وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ رواه النسائي

ஆஷூராவுடைய நோன்பு நோற்பது, (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது, ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஃபஜர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவது ஆகிய இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ 2373

மேலும் இந்தச் செய்தி இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மது, தப்ரானீ ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து இவ்வாறு நோன்பு வைக்கின்றனர். இது பலவீனமான செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ இஸ்ஹாக் அல்அஷ்ஜயீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவருடைய நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் குறிப்பிட்ட செய்தி பலவீனம் என்றாலும் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி ஆதாரமாக உள்ளது.

மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர்.  அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 969

இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை திக்ரு தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச்சிறப்பு உண்டு.

எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்டையில் இந்த நாட்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அதைத் தவறு என்று கூற முடியாது.          

இந்த நாட்களில் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று நான் பார்த்ததே இல்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இதற்கு எதிரானது அல்ல.

2012حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 2186

இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.

இந்த ஒன்பது நாட்கள் நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.

ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாகக் கருதப்படும்.

உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.

துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்.

The original source (Tamizh): 

TI0060 - Tamizh - Is ‘Arafah fasting there (in Islam)?

அரஃபா  நோன்பு உண்டா?



அரஃபா நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத் தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரஃபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள் .

வஹீதுஸ் ஸமான்

பதில் :

அரஃபாவில் ஹாஜிகள் கூடும் போது அவர்கள் நோன்பு நோற்பது நபிவழி அல்ல.

1989حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَوْ قُرِئَ عَلَيْهِ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلَابٍ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ فَشَرِبَ مِنْهُ وَالنَّاسُ يَنْظُرُونَ رواه البخاري
மைமூனா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அரஃபா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
நூல் : புகாரி 1989

ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைப்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

1976 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம் 1976

மேற்கண்ட ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு வைத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

அடுத்து அரஃபா நாள் என்பது எது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சவூதி அரசாங்கம் அரஃபா நாள் என்று எதை அறிவிக்கிறதோ அந்த நாள் ஹாஜிகளுக்கு அரஃபா நாள் என்றாலும் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் அதுவே அரஃபா நாளாகுமா? அல்லது அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்ட அடிப்படையில் ஒன்பதாவது நாள் அரஃபா நாள் ஆகுமா?

அரஃபா நாள் என்ற சொல்லை வைத்து ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளே அரஃபா நாள் என்று சிலர் வாதிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கம் இதற்கு மாற்றமாக உள்ளது.

துல் ஹஜ் மாதம் பிறை ஒன்பதாவது நாளே அரஃபாவுடைய நாள். அவரவர் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு எப்போது துல்ஹஜ் மாதம் பிறை 9 வருகின்றதோ அந்த நாளே அவருக்கு அரஃபாவுடைய நாள் என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறையாக இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் பதிமூன்று வருட காலங்கள் வாழ்ந்துள்ளார்கள். இக்கால கட்டத்தில் அரஃபாவுடைய நாளை நிச்சயம் அவர்கள் அடைந்திருப்பார்கள்.

மக்காவில் ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்று பார்த்து அன்றைய நாளில் தான் மற்ற பகுதியில் உள்ளவர்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று இருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து ஒருவரை மக்காவிற்கு அனுப்பி ஹாஜிகள் எப்போது கூடுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு வருமாறு கூறியிருப்பார்கள். அவர் வந்த பிறகு அந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்.

ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாக எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவில்லை. எனவே மதீனாவில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்களுக்கு பிறை ஒன்பது எப்போது வந்ததோ அந்த நாளில் தான் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் அரஃபா நாள் நோன்பை நோற்றார்கள் என்பது தெளிவாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று சிலர் கூறுவது ஏற்க முடியாததாகும். அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்துக் கொடுத்தால் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பார்கள்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மதீனாவுக்கு வெளியில் ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஹாஜிகள் அரஃபாவில் கூடும் தினம் தெரிய வழி இல்லை. அந்த ஊர்வாசிகள் தமது ஊர்களில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா தினத்தை முடிவு செய்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த போது ஹாஜிகள் அரஃபாவில் கூடியுள்ளார்கள். அரஃபாவில் ஹாஜிகள் கூடிய செய்தியை அறிந்து, அதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவில்லை. தங்களுடைய பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் தான் அரஃபா நாள் நோன்பைத் தீர்மானித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் மக்காவில் ஹாஜிகள் கூடும் நாளை அறிந்து அந்த நாளிலேயே நோன்பு வைக்க முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் தலைப்பிறை பார்த்த நாளிலிருந்து எட்டு நாட்கள் கழித்துத் தான் அரஃபா நாள் வருகின்றது. இந்த எட்டு நாட்கள் இடைவெளியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையேனும் அனுப்பி அரஃபா நாளை விசாரித்து வரச் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது.

மக்காவிலும், மதீனாவிலும் ஒரே நாளில் பிறை தென்பட்டிருக்கும் என்று சிலர் கூற முற்படலாம். ஒரே நாளில் தென்படுவதற்கு வாய்ப்பிருந்தது போல் வெவ்வேறு நாட்களில் தெரிவதற்கும் வாய்ப்பு இருந்தது என்பது தான் இதற்கான நமது பதில்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இப்போது இருப்பது போன்று தொலைத்தொடர்பு வசதிகள் இருந்திருந்தால் அவர்கள் அதைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சிலர் இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள்.

நாம் கேட்பது இருக்கின்ற வசதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது தான்.

தொலைபேசி இருந்தால் கேட்டுத் தெரிந்திருப்பார்களாம். முதல் பிறைக்கும், அரஃபவிற்கும் எட்டு நாள் வித்தியாசம் உள்ளது. இந்த எட்டு நாள் அவகாசத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி விசாரித்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்து மக்கள் தங்கள் பகுதியில் பிறை பார்த்த அடிப்படையில் தான் அரஃபா நாளை முடிவு செய்திருப்பார்களே தவிர மக்காவில் கூடுவதை அறிந்து முடிவு செய்திருக்கவே முடியாது.

ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் தால் உலகம் முழுமைக்கும் அரஃபா நாள் என்று ஒருவர் கூறினால் இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தவறிழைத்து விட்டார்கள் என்று பழி சுமத்துகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் எப்படி அரஃபா நாளை முடிவு செய்தார்களோ அப்படி முடிவு செய்வதைத் தவறு என்று சொல்லும் எந்தக் கருத்தும் நச்சுக் கருத்தாகும் என்பதை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லை.


The original source (Tamizh): 

TI0059 - Tamizh - Funeral prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

ஜனாஸா தொழுகை


ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்குத் தொழுவித்து அடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். இறந்தவருக்கு எப்படித் தொழுவிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றைக் காண்போம்.

தொழுவிக்கும் இடம்:


பள்ளிவாசலின் உள்பகுதி, வெளிப்பகுதி, வீடுகள், திறந்த வெளி மற்றும் எந்த இடத்திலும் மய்யித்தை வைத்துத் தொழுவிக்கலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள், ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சடலத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு சென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், 'எவ்வளவு விரைவாக மக்கள் மறந்து விடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஹைல் பின் அல்பைளா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்பாத் பின் அப்தில்லாஹ்
நூல்: முஸ்லிம் 1770

தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவரை யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 1329

இந்த ஹதீஸில் ஜனாஸாத் தொழுகை தொழுமிடத்திற்கு அருகில் என்று வருகின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கி வைத்திருந்ததை அறியலாம். இந்த இடம் பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் இருந்துள்ளது. அதனால் தான் அந்த இடத்தில் வைத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளார்கள்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள், அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். (தொழுவிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

தொழக் கூடாத நேரங்கள்:


சூரியன் உதிக்கத் துவங்கியதிலிருந்து முழுமையாக வெளிவரும் வரை, சூரியன் உச்சத்திற்கு வந்து மேற்கின் பக்கம் சாயும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரை ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதும், அடக்கம் செய்வதும் கூடாது.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம் எனவும் இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை
சூரியன் உச்சிக்கு வந்தது முதல் சாயும் வரை
சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1511

குழந்தைக்கு ஜனாஸாத் தொழுகை:


பருவ வயதை அடையாத குழந்தையாக இருந்தால் தொழுவிக்கலாம்; தொழுவிக்காமலும் அடக்கம் செய்யலாம்.

பதினெட்டு மாதக் குழந்தையான நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இறந்த போது, நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்குத் தொழுவிக்கவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி
நூல்கள்: அபூதாவூத் 2772, அஹ்மத் 25101

அன்ஸாரி சிறுவர்களில் ஒரு சிறுவரின் உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1921

ஜனாஸா வைக்கும் முறை:


ஜனாஸாவை இமாமுக்கு முன்னால் குறுக்கு வசமாக வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது, ஜனாஸா கிடத்தப்பட்டது போன்று அவர்களுக்கும், கிப்லாவிற்கும் இடையில் நான் குறுக்கு வசமாகப் படுத்துக் கிடப்பேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 383

இந்த ஹதீஸிலிருந்து ஜனாஸாவைக் குறுக்கு வசமாக வைக்க வேண்டும் என்பதை அறியலாம்.

இமாம் நிற்க வேண்டிய இடம்:


ஆண் ஜனாஸாவாக இருந்தால் தலைப்பகுதியை நோக்கியும் பெண் ஜனாஸாவாக இருந்தால் வயிற்றுப் பகுதியை நோக்கியும் இமாம் நிற்க வேண்டும்.

ஒரு ஆணுடைய ஜனாஸா தொழுகையில் அனஸ் (ரலி)யுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவர் (மய்யித்தின்) தலையை நோக்கி நின்றார். பிறகு குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடைய ஜனாஸா கொண்டு வரப்பட்டது. 'அபூஹம்ஸாவே! இவருக்குத் தொழ வையுங்கள்' என்று அனஸ் (ரலி)யிடம் கேட்டனர். அப்போது கட்டிலின் நடுப்பகுதியை நோக்கி நின்றார். அப்போது அவர்களிடம் அலா பின் ஸியாத் என்பார், 'ஆண் ஜனாஸாவுக்கு தலைப்பகுதியிலும், பெண் ஜனாஸாவுக்கு இப்போது நீங்கள் நின்ற இடத்திலும் நபி (ஸல்) அவர்கள் நின்றதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்ட போது, அனஸ் (ரலி) அவர்கள், ஆம் என்று கூறினார். தொழுது முடித்ததும் '(இதை) கவனத்தில் வையுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகாலிப்
நூல்கள்: திர்மிதீ 955, இப்னுமாஜா 1483, அஹ்மத் 12640

பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை:


ஆண் ஜனாஸாவும், பெண் ஜனாஸாவும் ஒரே நேரத்தில் வந்தால் கிப்லாவிலிருந்து முதலில் பெண் ஜனாஸாவும் அடுத்து ஆண் ஜனாஸாவும் வைக்கப்பட்டு, ஆண் ஜனாஸாவுக்கு அருகில் இமாம் நிற்க வேண்டும். பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை தொழுவிக்கலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒன்பது ஜனாஸாக்களுக்குச் சேர்த்து ஒரே தொழுகையாகத் தொழுதார். ஆண் ஜனாஸாக்களை இமாமை அடுத்தும் பெண் ஜனாஸாக்களை ஒரே வரிசையில் கிப்லா (திசையில் உள்ள சுவரை) அடுத்தும் வைத்தார்கள்.
(இன்னொரு தொழுகையின் போது) உம்மு குல்ஸும் என்ற பெண்ணின் ஜனாஸாவும், ஸைத் என்று அழைக்கப்படும் அவரது மகன் ஜனாஸாவும் சேர்த்து வைக்கப்பட்டன. ஸயீத் பின் அல்ஆஸ் அன்றைய தினத்தில் இமாமாக (ஆட்சியாளராக) இருந்தார். இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி), அபூகாதாதா (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். இமாமை அடுத்து சிறுவரின் ஜனாஸா வைக்கப்பட்டது. இது எனக்கு வெறுப்பாகத் தோன்றியது. உடனே நான் இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி) அபூகதாதா (ரலி) ஆகியோரை நோக்கி, 'இது என்ன முறை?' என்று கேட்டேன். அதற்கு, 'இது நபிவழி' என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: நஸயீ 1952

ஜனாஸா தொழுகை தொழும் முறை:


ஜனாஸாத் தொழுகைக்காக உளூச் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு உளூச் செய்ய வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'ஜனாஸா தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போன்றதல்ல; இதில் ருகூவு, ஸஜ்தா கிடையாது. அது ஒரு துஆ தான்; எனவே இதற்கு உளூ தேவையில்லை' என்பதே இவர்களது வாதம். ஆனால் ஜனாஸா தொழுகை துஆ என்றாலும் அது தொழுகைக்கு உள்ளே தான் செய்யப்படுகின்றது.

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனும்) தஸ்லீம் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957

இந்த ஹதீஸ் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீரில் தொடங்கி தஸ்லீமில் முடிப்பது தான். ருகூவு, ஸஜ்தா இல்லை என்பதற்காக தொழுகை இல்லை என்றாகி விடாது. ஜனாஸா தொழுகையும் தக்பீரில் ஆரம்பித்து, தஸ்லீமில் முடிப்பதாகத் தான் உள்ளது. மேலும் அல்லாஹ் தனது திருமறையில்...

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்
அல்குர்ஆன் 9:84

என்ற வசனத்தில் ஜனாஸா தொழுகை குறித்து கூறும் போது தொழுகை என்றே குறிப்பிடுகிறான். இது போல் ஹதீஸ்களிலும் தொழுகை என்றே கூறப்பட்டுள்ளன. எனவே மற்ற தொழுகைகளில் இருந்து ஜனாஸா தொழுகையைப் பிரித்துப் பார்ப்பது கூடாது. எனவே எல்லாத் தொழுகைக்கும் உளூச் செய்வது போல் இத் தொழுகைக்கும் உளூச் செய்ய வேண்டும்.

அதே போல் கிப்லாவை முன் நோக்குதல், முதல் தக்பீரில் கைகளை உயர்த்துதல், நெஞ்சின் மீது கைகளை வைத்தல் ஆகிய அனைத்தும் மற்ற தொழுகைகளில் செய்வதைப் போலவே ஜனாஸா தொழுகையிலும் செய்ய வேண்டும்.

எத்தனை தக்பீர்கள்?:


ஜனாஸாத் தொழுகையில் கூடுதலாக நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு முஸல்லா என்ற திடலுக்குச் சென்று மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1245, முஸ்லிம் 1733

ஸைத் பின் அர்க்கம் (ரலி) அவர்கள், எங்களில் இறந்தவருக்காகத் தொழுவிக்கும் போது நான்கு தக்பீர்கள் (வழமையாக) சொல்பவர்களாக இருந்தனர். ஒரு முறை ஒரு ஜனாஸா தொழுகையில் ஐந்து தக்பீர்கள் சொன்னார்கள். அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் ஜந்து தக்பீர்கள் சொல்லி இருக்கிறார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா
நூல்: முஸ்லிம் 1743

ஒவ்வொரு தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்த வேண்டுமா?:


முதல் தக்பீருக்கு கைகளை உயர்த்தி, நெஞ்சின் மீது வைக்க வேண்டும். முதல் தக்பீரையும் சேர்த்து நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும். தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இல்லை. எனவே முதல் தக்பீர் தவிர மற்ற தக்பீர்களில் கைகளை உயர்த்தக் கூடாது.

தக்பீர்களுக்கிடையில் ஓத வேண்டியவை:


முதல் தக்பீருக்குப் பின்னால் ஸூரத்துல் ஃபாத்திஹாவும், இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் தொழுகையில் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தும், மற்ற தக்பீர்களுக்குப் பின்னால் மைய்யித்துக்காக ஹதீஸில் வந்துள்ள துஆக்களையும் ஓதவேண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார்.
அறிவிப்பவர்: தல்ஹா
நூல்: புகாரீ 1335

“ஜனாஸா தொழுகையில் இமாம் முதல் தக்பீர் கூறிய பின்னர் ஃபாத்திஹா அத்தியாயத்தை சப்தமில்லாமல் ஓதுவதும் பின்னர் மீதமுள்ள தக்பீர்களில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதும் உளப்பூர்வமான முறையில் (மய்யித்திற்கு) பிரார்த்தனை செய்வதும் குறைந்த சப்தத்தில் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும்” என்று ஒரு நபித் தோழர் அறிவித்தார்.
அறிவிப்பவர்: அபூ உமாமா
நூல்கள்: பைஹகீ 6750, ஹாகிம் 1331

ஜனாஸா தொழுகைதுஆக்கள்:


மய்யித்திற்காக துஆச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மற்றும் அவர்கள் ஓதிய துஆக்கள் ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளன.

وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، سَمِعَهُ يَقُولُ سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ، يَقُولُ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ أَنَا ذَلِكَ الْمَيِّتَ ‏.‏ قَالَ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِ هَذَا الْحَدِيثِ أَيْضًا ‏.‏

“அல்லாஹும்மக்ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஅஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்சில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கை(த்)தஸ் ஸவ்பல் அப்யள மினத்தனஸ். வப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅஇத்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நார்.
(பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவருக்குச் சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! மேலும் இவரது நுழைவிடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும், ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையை விடச் சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக! கப்ருடைய வேதனை, நரக வேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!)
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1756

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ ‏"‏ ‏.‏

அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வ காயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வ உன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பய்தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லாதஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு

(பொருள்: எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறைவா! நீ மன்னிப்பாயாக! எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்துவிடாதே!)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: இப்னுமாஜா 1487, அபூதாவூத் 2756

ஸலாம் சொல்லுதல்:


நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறிய பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று இரு புறமும் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டு விட்டனர். தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையிலும் ஸலாம் கூறுவதும் அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: பைஹகீ 6780, தப்ரானீ கபீர் (பாகம்: 1, பக்கம்82)

(தொழுகையை முடிக்கும் போது) வலது புறமும், இடது புறமும் திரும்பி 'அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்' என்று முகத்தைத் திருப்பி நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516

ஜனாஸாத் தொழுகையில் பெண்கள்:


ஆண்களைப் போன்று பெண்களும் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் பங்கெடுத்துள்ளார்கள்.

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். தொழுவிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்னால் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி) அவர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நின்றார்கள். இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா
நூல்கள்: ஹாகிம் 1350, பைஹகீ 6699

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 192-202

The original source (Tamizh):

TI0058 - Tamizh - Praying after performing wudhu (ablution)

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

உளூச் செய்த பின் தொழுதல்


ஒருவர் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் இரண்டு ரக்அத்கள் அல்லது விரும்பிய அளவு தொழுவது சிறப்பிற்குரியதாகும்.

ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி)யிடம் நபி (ஸல்) அவர்கள், 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்'என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்'என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1149, முஸ்லிம் 4497

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 202-203

The original source (Tamizh): 

TI0057 - Tamizh - Praying before sitting at Masjid

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல்


பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

“உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 1167, முஸ்லிம் 1166

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 202

The original source (Tamizh): 

TI0056 - Tamizh - Eclipse prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

கிரகணத் தொழுகை


சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.


  • கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
  • பள்ளியில் தொழ வேண்டும்.
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
  • இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.
  • ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்.
  • நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.
  • தொழுகைக்குப் பின் இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.
  • கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

“நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1645

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது “அஸ்ஸலாத்து ஜாமிஆ” என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1662

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1645

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1647

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1645

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை'என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1662

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்;தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1643

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1666

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 178-181

The original source (Tamizh): 

TI0055 - Tamizh - Rain prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

மழைத் தொழுகை


நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென  குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.


  • திடலில் தொழ வேண்டும்.
  • சூரியன் உதித்தவுடன் தொழ வேண்டும்.
  • மேலாடையை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
  • அதில் இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்
  • முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.
  • தொழுத பின்னர் இமாம் மிம்பரில் ஏறி சொற்பொழிவு நிகழ்த்தாமல் இறைவனைப் பெருமைப்படுத்தல், பாவமன்னிப்புத் தேடல் போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். இமாமைப் போன்று மற்றவர்களும் இரு கைகயும் உயர்த்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  • இரு கைகளையும் மற்ற துஆக்களில் உயர்த்துவதைப் போன்று அல்லாமல் புறங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு கைகளைக் கவிழ்த்து உயர்த்த வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க(தொழும் திடல் நோக்கிப் ) புறப்பட்டுச் சென்றார்கள். (திடலில்)கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிராத்திக்கலானார்கள்.தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றி போட்டுக்கொண்டார்கள்.பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமாக (குர்ஆன்)ஓதினார்கள் .
நூல்: புகாரீ 1025

நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1012, முஸ்லிம் 1629

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 1024

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது தம் புறங்கைகளால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1632

நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 512, அபூதாவூத் 984, நஸயீ 1491, இப்னுமாஜா 1256, அஹ்மத் 3160

இந்த ஹதீஸில் 'பெருநாள் தொழுகையைப் போல் தொழுவித்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகையைப் போல் என்று வர்ணிப்பது பெருநாள் தொழுகையில் கூறப்படும் கூடுதல் தக்பீர்களைத் தான். எனவே பெருநாள் தொழுகையில் கூறுவதைப் போல் முதல் ரக்அத்தில் 7 கூடுதல் தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5கூடுதல் தக்பீர்களும் சொல்ல வேண்டும்.

மழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை:

حَدَّثَنَا ابْنُ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بَوَاكِي فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعاً نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏"‏ ‏.‏ قَالَ فَأَطْبَقَتْ عَلَيْهِمُ السَّمَاءُ ‏.‏

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(பொருள்: இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 988


حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلاً، دَخَلَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ باب كَانَ وُجَاهَ الْمِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا‏.‏ قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا ‏"‏‏.‏ قَالَ أَنَسٌ وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلاَ دَارٍ، قَالَ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ‏.‏ قَالَ وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَيْهِ ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ ‏"‏‏.‏ قَالَ فَانْقَطَعَتْ وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ‏.‏ قَالَ شَرِيكٌ فَسَأَلْتُ أَنَسًا أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ قَالَ لاَ أَدْرِي‏.‏

அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா

(பொருள் : இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு நீர் வழங்குவாயாக! இறைவா! எங்களுக்கு வழங்குவாயாக!)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி
நூல்: புகாரீ 1013


حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ نِزَارٍ، حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ، عَنْ يُونُسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ شَكَى النَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُحُوطَ الْمَطَرِ فَأَمَرَ بِمِنْبَرٍ فَوُضِعَ لَهُ فِي الْمُصَلَّى وَوَعَدَ النَّاسَ يَوْمًا يَخْرُجُونَ فِيهِ قَالَتْ عَائِشَةُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ بَدَا حَاجِبُ الشَّمْسِ فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ فَكَبَّرَ صلى الله عليه وسلم وَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّكُمْ شَكَوْتُمْ جَدْبَ دِيَارِكُمْ وَاسْتِئْخَارَ الْمَطَرِ عَنْ إِبَّانِ زَمَانِهِ عَنْكُمْ وَقَدْ أَمَرَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَدْعُوهُ وَوَعَدَكُمْ أَنْ يَسْتَجِيبَ لَكُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ ‏{‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ * مَلِكِ يَوْمِ الدِّينِ ‏}‏ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلاَغًا إِلَى حِينٍ ‏"‏ ‏.‏ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَلَمْ يَزَلْ فِي الرَّفْعِ حَتَّى بَدَا بَيَاضُ إِبْطَيْهِ ثُمَّ حَوَّلَ عَلَى النَّاسِ ظَهْرَهُ وَقَلَّبَ أَوْ حَوَّلَ رِدَاءَهُ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ وَنَزَلَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَأَنْشَأَ اللَّهُ سَحَابَةً فَرَعَدَتْ وَبَرَقَتْ ثُمَّ أَمْطَرَتْ بِإِذْنِ اللَّهِ فَلَمْ يَأْتِ مَسْجِدَهُ حَتَّى سَالَتِ السُّيُولُ فَلَمَّا رَأَى سُرْعَتَهُمْ إِلَى الْكِنِّ ضَحِكَ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ فَقَالَ ‏"‏ أَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَأَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادُهُ جَيِّدٌ أَهْلُ الْمَدِينَةِ يَقْرَءُونَ ‏{‏ مَلِكِ يَوْمِ الدِّينِ ‏}‏ وَإِنَّ هَذَا الْحَدِيثَ حُجَّةٌ لَهُمْ ‏.‏

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.

(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்;நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 992

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 175-178

The original source (Tamizh):

TI0054 - Tamizh - Isthikhara (seeking khayr/goodness) prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

இஸ்திகாரா தொழுகை


நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள துஆவை ஓத வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக் கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

“உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,


حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ ‏ "‏ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ ـ قَالَ ـ وَيُسَمِّي حَاجَتَهُ ‏"‏‏.‏

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பிஇல்மி(க்)க லஅஸ்தக்திரு(க்)க பிகுத்ரதி(க்)க வஅஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)கல் அளீம். ஃப இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்(த்)த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைரு(ன்)ல் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபக்துர்ஹுலீ வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ரு(ன்)ல்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆ(க்)கிப(த்)தி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி'

(பொருள்: இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன். நான் ஆற்றலுள்ளவன் அல்லன். நீஅனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவானவற்றையும் நீ அறிபவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் விருத்தி செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!)
என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரீ 1166

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 173

The original source (Tamizh): 

TI0053 - Tamizh - Prayer whilst travelling:

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

பயணத் தொழுகை


கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம்.

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு என்றும், நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அரபியில் கஸ்ர் என்றும் கூறுவர்.

ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம்.

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்
நூல்: முஸ்லிம் 1230

இந்த செய்தியின் அறிவிப்பாளர், நபி (ஸல்) அவர்கள் கஸ்ர் செய்த அளவை குறிப்பிடும் போது மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ என்று ஐயத்துடன் அறிவிக்கிறார். இதில் மூன்று பர்ஸக் என்பது ஒன்பது மைல்களாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் கூடுதல் அளவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றைய கால மூன்று பர்ஸக் என்பது இன்றைய கால அளவின் படி சுமார் 25 கி.மீ. ஆகும்.

ஒருவர் 25 கி.மீ. தூரமுள்ள ஊருக்குப் பயணம் செல்ல நாடி ஊர் எல்லையை அவர் கடந்து விட்டால் அவர் ஜம்வு,கஸ்ர் செய்யலாம்.

'மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் மக்கா புறப்பட்டார்கள். (இடையில் உள்ள ஊரான) துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.'
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1089, முஸ்லிம் 1228

பயணத்தில் இருப்பவர் விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் லுஹருடைய நேரத்தில் தொழலாம்.

விரும்பினால் லுஹர் தொழுகையையும், அஸர் தொழுகையையும் அஸருடைய நேரத்தில் தொழலாம்.

அதே போல் மஃரிப் தொழுகையையும் ,இஷா தொழுகையையும் மஃரிபுடைய நேரத்தில் தொழலாம்.

அல்லது இஷாத் தொழுகையின் நேரத்தில் தொழலாம்.

அப்போது நான்கு ரக்அத் தொழுகைகளை (லுஹர், அஸர்,இஷா) இரண்டு ரக்அத்களாகச் சுருக்கியும் தொழலாம். சுப்ஹுத் தொழுகையை இரண்டு ரக்அத்தாகவும், மஃரிப் தொழுகையை மூன்று ரக்அத்களாவுமே  தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிப் தொழுகையையும், இஷாத் தொழுகையையும் சேர்த்து தொழுதார்கள். மஃரிப் மூன்று ரக்அத்களாகவும் இஷா இரண்டு ரக்அத்களாகவும் ஒரே இகாமத்தைக் கொண்டு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2477

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 1111

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1091, முஸ்லிம் 1263

இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழும் போது இரண்டு தொழுகைக்கும் சேர்த்து ஒரு பாங்கு சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக இகாமத் சொல்லி தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும், இஷாவையும் ஒரு பாங்கு இரண்டு இகாமத் சொல்லி தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2334

சுருக்கித் தொழுவது கட்டாயம் இல்லை


பயணியாக இருப்பவர் தொழுகையைச் சுருக்கித் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால் முழுமையாகவும் தொழலாம்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்த போது, 'அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை. நான் நோன்பு நோற்கிறேன்' என்று நான் கேட்டடேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! சரியாகச் செய்தாய்!” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1439

எத்தனை நாட்கள்


ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபி (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை.

உள்ளூரில் ஜம்வு செய்தல்


ஒருவர் உள்ளூரில் இருக்கும் போதும் எப்போதாவது ஜம்வு செய்து (சேர்த்துத்) தொழுவதற்கு அனுமதி உள்ளது. எனினும் இதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தொடர்ந்து ஜம்வு செய்து வந்தால் தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும் என்ற இறைவனின் கட்டளைக்குப் பொருள் இல்லாமல் போய்விடும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும், மஃரிபையும், இஷாவையும் ஏழு, எட்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 543

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1267

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 169-172

The original source (Tamizh): 

TI0052 - Tamizh - Jummah (Friday) prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

ஜுமுஆத் தொழுகை


வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும்.

நேரம்:


ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 904

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.
அறிவிப்பவர்: ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 4168, முஸ்லிம் 1424

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 940

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 939, முஸ்லிம் 1560

ஜுமுஆக்குக் குளிப்பது:


ஜுமுஆத் தொழுகைக்காக வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கட்டாயக் கடமையாகும். தலைக்கு எண்ணெய் மற்றும் நறுமணமும் பூசிக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டும்.

'உங்களில் எவரும் ஜுமுஆத் தொழுகைக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 894

'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 895, முஸ்லிம் 1397

'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸீ (ரலி)
நூல்: புகாரீ 880

குத்பாவிற்கு முன்பே வருதல்:


ஜும்ஆவில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பாகப் பள்ளிக்கு வர வேண்டும்.
'ஜுமுஆ நாள் வந்து விட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும், அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும், அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும், அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போன்றவரும் ஆவார்கள். இமாம் வந்து விட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 929, முஸ்லிம் 1416

வியாபாரத்தை விட்டு விடுதல்:


ஜுமுஆ நாள் அன்று தொழுகை நேரத்தில் வியாபாரம் செய்வது கூடாது. பாங்கு சொல்லப்பட்டு விட்டால் உடனடியாகத் தொழுகைக்கு விரைய வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
அல்குர்ஆன் 62:9

ஜுமுஆவில் பெண்களும் கலந்து கொள்ளுதல்:


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

காஃப் வல்குர்ஆனில் மஜீத் என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442

ஜுமுஆத் தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள்:


'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: அபூதாவூத் 901

மேற்கண்ட நால்வரைத் தவிர மற்றவர்கள் மீது ஜுமுஆ கடமை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தாலும் பயணத்தில் இருப்பவர்கள் மீதும் ஜுமுஆ கடமையில்லை என்பதை வேறு ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அரஃபாவில் லுஹர் தொழுகையையும் அஸ்ர் தொழுகையையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள்.
(நூல் : அஹமத் 5856)

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.
(நூல் : புகாரீ 45)

அரஃபா தினம் வெள்ளிக்கிழமையாக இருந்தும் நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையை நிறைவேற்றாமல் லுஹர் தொழுகையைத் தான் தொழுதுள்ளார்கள்.எனவே பயணிக்கு ஜுமுஆத் தொழுகை கடமையில்லை என்பதை அறியலாம்.

ஜுமுஆ பாங்கு:


ஐவேளைத் தொழுகைக்கு உள்ளது போல் ஜுமுஆ தொழுகைக்கும் ஒரு பாங்கு சொல்லப்பட வேண்டும். அந்த பாங்கு இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரீ 916

உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கைப் போன்றது அல்ல! மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவர்கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள். ஸவ்ரா என்பது மதீனாவில் உள்ள ஒரு வீடாகும்
(இப்னுமாஜா 1125)

உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்படுத்திய அந்த அறிவிப்பைக் கூட பள்ளிவாசலில் செய்யவில்லை. எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாம் பாங்கை ஏற்படுத்தவில்லை என்பதே சரியானதாகும்.

ஒரு வேளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவிற்கு இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்கள் என்று வைத்துக் கொண்டாலும் நபிவழியைத் தான் முஸ்லிம்கள் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்களது நடைமுறைக்கு முரணாக யார் செய்திருந்தாலும் அது மார்க்கமாகாது. எனவே ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு சொல்வதே நபிவழியாகும்.
குத்பாவின் போது பேசக் கூடாது:

ஜுமுஆத் தொழுகையில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவரது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பேசக் கூடாது.
'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் வாய் மூடு' என்று நீ கூறினால் வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 934, முஸ்லிம் 1404

ஓத வேண்டிய சூராக்கள்:


நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் முதல் ரக்அத்தில் அஃலா(87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா(88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

சில சமயங்களில் ஜுமுஆ (62வது)அத்தியாயத்தையும் (இரண்டாம் ரக்அத்தில்) முனாபிக்கூன்(63 வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா(என்ற 87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா(என்ற 88வது அத்தியாயத்தையும் ) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஒரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷுர்(ரலி)
நூல் :முஸ்லிம் 1592

நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் ஜுமுஆ (62வது)அத்தியாயத்தையும் (இரண்டாம் ரக்அத்தில்) முனாபிக்கூன்(63 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல் :முஸ்லிம் 1594

ஜுமுஆவுடைய சுன்னத்:


ஜுமுஆத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் பயான் செய்து கொண்டிருந்தாலும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட வேண்டும்.

ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். '(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: புகாரீ 931, முஸ்லிம் 1449

முஸ்லிம் அறிவிப்பில் கூடுதலாக 'அந்த இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழு!' என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்குப் பின்னர் (வீட்டிற்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1462

'உங்களில் ஒருவர் ஜுமுஆத் தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1457

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 162-168

The original source (Tamizh): 

TI0051 - Tamizh - Saying Taqabbalallahu minna wa minkum on Eid

பெருநாளின் போது தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் என்று கூறலாமா?


அப்துந் நாஸர் Misc

இரண்டு பெருநாட்களின் போதும் ”தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்” என்று கூறும் பழக்கம் அரபு தேசத்து மக்களிடையே காணப்படுகிறது. அவர்களிடமிருந்து பிர தேசத்து முஸ்லிம்களும் அவ்வாறு கூறுவதை பின்பற்றி வருகின்றனர்.

பெருநாளின் போது ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ” என்று கூறலாம் என வரும் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாக உள்ளன., பலவீனத்துடன் அவை ஒன்றுக் கொன்று முரணாகவும் உள்ளன.
ஒரு செய்தியில் நபியவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்றும் மற்றொரு செய்தியில் அவ்வாறு கூறுவது யூதக் கலாச்சாரம் என்றும் நபியவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அந்த அறிவிப்புகளையும் அவை எவ்வகையில் பலவீனமானது என்பதையும் சுருக்கமாகக் காண்போம்.

முதலாவது அறிவிப்பு

سنن البيهقي الكبرى (3/ 319)
 6088 - أخبرنا أبو الحسن بن عبدان أنبأ أحمد بن عبيد ثنا إسحاق بن إبراهيم بن سفيان ثنا أبو علي أحمد بن الفرج المقرئ ثنا محمد بن إبراهيم الشامي ثنا بقية بن الوليد عن ثور بن يزيد عن خالد بن معدان قال : لقيت واثلة بن الأسقع في يوم عيد فقلت تقبل الله منا ومنك فقال نعم تقبل الله منا ومنك قال واثلة لقيت رسول الله صلى الله عليه و سلم يوم عيد فقلت تقبل الله منا ومنك قال نعم تقبل الله منا ومنك

ஹாலித் பின் மஃதான் என்பார் அறிவிக்கின்றார் : நான் பெருநாள் அன்று ”வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து ”தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன். அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சொன்னார்கள் ”நான் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ”தகப்பலல்லாஹு மின்னா வமின்க” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ”நஅம் (ஆமாம்) தகப்பலல்லாஹு மின்னா வமின்க” என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.

நூல் : சுனன் அல்பைஹகில் குப்ரா (6088)

இந்தச் செய்தியில் நான்கு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. பகிய்யா இப்னுல் வலீத் . இவர் முதல்லிஸ் ஆவார். அதாவது தான் செவியேற்காதவர்களிடமிருந்து செவியேற்றதைப் போன்று அறிவிப்பவர். இவர்கள் தெளிவாகச் செவியேற்றதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவித்தால் மட்டுமே அந்த அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இந்தச் செய்தியில் இவர் ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே அறிவிக்கின்றார். முதல்லிஸ் இவ்வாறு அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

2. இஸ்ஹாக் இப்னு இப்ராஹிம் இப்னு சுஃப்யான் என்ற அறிவிப்பாளர் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளார். இவர் ”மஜ்ஹூலுல் ஹால்” ஆவார். அதாவது யாரென்றே அறியப்படாதவர் ஆவார். இந்த அடிப்படையிலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.

3. அஹ்மத் இப்னுல் ஃபர்ஜ் என்ற அறிவிப்பாளர் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.

4. முஹம்மத் பின் இப்ராஹிம் அஸ்ஸாமீ என்ற அறிவிப்பாளர் இச்செய்தியில் இடம் பெற்றுள்ளார். இவர் ”மத்ரூகுல் ஹதீஸ்” ”ஹதீஸ்களில் கைவிடப்பட்டவர்” ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேற்கண்ட செய்தியில் நான்கு பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ள காரணத்தினால் இது இட்டுக் கட்டப்பதற்கு நெருக்கமான மிகமிகப் பலவீனமான செய்தியாகும்.

இரண்டாவது அறிவிப்பு

سنن البيهقي الكبرى (3/ 319)
 6091 - أخبرناه أبو الحسين بن بشران ببغداد أنبأ أبو جعفر محمد بن عمرو الرزاز ثنا محمد بن الهيثم بن حماد ثنا نعيم بن حماد ثنا عبد الخالق بن زيد بن واقد الدمشقي عن أبيه عن مكحول عن عبادة بن الصامت رضي الله عنه قال : سألت رسول الله صلى الله عليه و سلم عن قول الناس في العيدين تقبل الله منا ومنكم قال ذلك فعل أهل الكتابين وكرهه عبد الخالق بن زيد منكر الحديث قاله البخاري

 عبد الخالق بن زيد الدمشقي متروك الحديث

உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பெருநாட்களிலும் மக்கள் ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் ”இது வேதக்காரர்களான (யகூதி நஸாராக்களின்) கலாச்சாரமாகும்” என்று கூறி அவ்வாறு கூறுவதை வெறுத்தார்கள்.

நூல் : சுனன் அல்பைஹகி அல்குப்ரா (6091)

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அப்துல் ஹாலிக் இப்னு ஸைத் அத்திமிஸ்கி” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி ”முன்கருல் ஹதீஸ்” (நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிப்பவர்) என்று விமர்சித்துள்ளார். மேலும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.

இன்னும் சொல்லப் போனால் செய்தியின் தரத்தினை வைத்துப் பார்க்கும் போது ”தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்” என்று கூறலாம் என்று வரும் மிகப் பலவீனமான செய்தியை விட ”அவ்வாறு கூறுவது யகூதி நஸாரா கலாச்சாரம்” என்று வரும் பலவீனமான செய்திதான் ஒப்பீட்டளவில் குறைவான பலவீனம் உடையதாகும்.

எனவே இது தொடர்பான செய்திகள் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இதனை மார்க்கமாகக் கருதி பின்பற்றுவது கூடாது.

இது நபியவர்களின் காலத்திற்கு பிறகு உருவாகிய கலாச்சாரமாக இருக்கின்ற காரணத்தினால் இதற்கு மார்க்கச் சாயம் பூசுவது பித்அத் என்னும் நரகத்தில் தள்ளும் வழிகேடாகும்.

நன்றி : அப்துந் நாஸர் Misc

TI0050 - Tamizh - When should the six days of fasting be kept?

ஆறு நோன்பு எப்போது வைக்க வேண்டும்?


ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி),
நூல் : முஸ்லிம் 1164

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தொடர்ந்து'' என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான வாதமாகும்.  ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

தொடர்வது என்பதற்கு "அத்பஅஹு'' என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு "முததாபிஐன்'' என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
திருக்குர்ஆன் 58:4

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு "முததாபிஐன்'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம்.  ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது.  ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர்.  இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.  ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.

(குறிப்பு : 2003 டிசம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

The original source (Tamizh): 

TI0049 - Tamizh - Eid (festival) prayer

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

பெருநாள் தொழுகை


நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

தொழுகை நேரம்


நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472

'இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார்' என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்கள்: புகாரீ 951, முஸ்லிம் 3627

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், 'இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப்படியே நடந்துள்ளார்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் ரபாஹ்
நூல்: அபூதாவூத் 905

பெருநாள் தினத்தில் முதல் காரியமாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. மேலும் மேற்கண்ட ஹதீஸில் பகலில் ஆரம்பத்தில்... என்று கூறப்படுவதால் பெருநாள் தொழுகையைத் தாமதப்படுத்தாமல் காலை நேரத்திலேயே தொழுது விட வேண்டும்.

திடலில் தொழுகை


இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். 'மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்' (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472


பெருநாள் தொழுகையில் பெண்கள்


பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வரவேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?' என்றார். அதற்கு, 'அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1475

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்


பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்


நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 953

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லை


இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1476

பாங்கு இகாமத் இல்லை


இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும், இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1470


தொழும் முறை


பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். தக்பீர் தஹ்ரீமாவுக்குப் பின்னர், முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ... அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ... என்ற துஆவை ஓதி விட்டு, அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும்.
பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றிக் கூற வேண்டும்.
பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.
பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற அனைத்துக் காரியங்களையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 971, தாரகுத்னீ பாகம்: 2, பக்: 48, பைஹகீ 5968

ஓத வேண்டிய சூராக்கள்


நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் தொழுகையில் என்ன ஓதுவார்கள்?' என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது, 'அவ்விரு தொழுகையிலும் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்) இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்
நூல்: முஸ்லிம் 1477

சுத்ரா (தடுப்பு)


இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும் போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 972, முஸ்லிம் 773

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டு, தொழுமிடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 973, முஸ்லிம் 774

மிம்பர் இல்லை


வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (வீட்டிற்குத்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள்' என்று கூறினேன்.
அதற்கு மர்வான், 'நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது' என்றார். 'நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும்' என நான் கூறினேன்.
அதற்கு மர்வான், 'மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472
அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651 ஆகிய நூல்களின் அறிவிப்பில் 'மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை...' என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: இப்னுமாஜா 1278

சொற்பொழிவு பெண்களுக்குக் கேட்காவிட்டால்...


இரு பெருநாள்களிலும் பெண்களுக்கும் சொற்பொழிவு கேட்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்குக் கேட்கவில்லையானால் தனியாக அவர்களுக்கு பயான் செய்யலாம்.
(பெருநாளன்று) நான் நபி (ஸல்) அவர்களைக் கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுவித்தார்கள். பிறகு தமது உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பிலால் (ரலி), ஒரு ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தமது அணிகலன்களைப்) போடலானார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 1449

தக்பீரும் பிரார்த்தனையும்


இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள்,ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1474

அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 7:205

ஜுமுஆ அன்று பெருநாள்


வெள்ளிக்கிழமையன்று பெருநாள் வந்து விட்டால் விரும்பியவர் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு ஜுமுஆத் தொழுகையை தொழாமல் இருக்கலாம். விரும்பியவர் இரண்டு தொழுகைகளையும் நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பபிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போதும் இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1452

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜுமுஆத் தொழுகையையும் நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ
தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 907

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், 'இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப் படியே நடந்துள்ளார்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் ரபாஹ்
நூல்: அபூதாவூத் 905

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 181-192

The original source (Tamizh): https://www.goodreads.com/book/show/31452572