Saturday 7 July 2018

TI0101 - Tamizh - The timings for the five-time prayers

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.

فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا اطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ ۚ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا - 4:103
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன்  4:103)

சுப்ஹுத் தொழுகையின் நேரம்

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு

“சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075

லுஹர் தொழுகையின் நேரம்

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு.

“லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை “அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075

அஸ்ர் தொழுகையின் நேரம்

அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு.

(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது... ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 138

“அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076

மக்ரிப் தொழுகையின் நேரம்

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.

“மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு “ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076

இஷாத் தொழுகையின் நேரம்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள்,  “ நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!” என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்... செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறு நாள் பிலால் (ரலி) அவர்களிடம் ... இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், “கேள்வி கேட்டவர் எங்கே?  இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1079

“இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு “என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1074

இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா?இரவின் பாதி வரை நீடிக்கிறதா? அல்லது இரவின் மூன்றில் ஒரு பங்கு வரை நீடிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

“இரவில் பாதி வரை இஷா நீடிக்கிறது “ என்பதற்கும்,  “இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது” என்பதற்கும் நேரடியான ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்தில் நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.

“தூக்கத்தில் வரம்பு மீறுதல் இல்லை; மறு தொழுகை நேரம் வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான் வரம்பு மீறுதல் எனும் குற்றம் உள்ளது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1213

இஷாவின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கின்றது என்ற கருத்துடையவர்கள் கீழ்க்கண்டவாறு தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

மறு தொழுகை நேரம் வரை ஒரு தொழுகையின் நேரம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதில் சுப்ஹ் மட்டும் தான் விதி விலக்கு பெற்றுள்ளது.

“யார் சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்கிறாரோ அவர் சுப்ஹுத் தொழுகையை அடைந்து விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 579, 556

என்று மேற்கண்ட ஹதீஸில் விதிவிலக்கு உள்ளது. எனவே சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரம் லுஹர் வரை நீடிக்கும் என்று கருத முடியாது. ஆனால் மற்ற நான்கு தொழுகையின் நேரங்களும் அதற்கடுத்த தொழுகையின் நேரம் வரை நீடிக்கிறது. சுப்ஹுத் தொழுகையை சூரியன் உதிப்பதற்கு முன் தொழுது விட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இஷா தொழுகையின் நேரம் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்துடையவர்கள் இவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நிறுத்துகின்றனர்.

ஆனால் இந்த வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. ஏனெனில் சுப்ஹுத் தொழுகையின் இறுதி நேரத்தைப் போலவே இஷாவுடைய கடைசி நேரத்திற்கும் வரையறை உள்ளது என்பதை மேற்கண்ட முஸ்லிம் 1074 ஹதீஸிலிருந்து அறியலாம்.

எனவே இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை என்பது தான் சரியானதாகும். சுப்ஹ் வரை நீடிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் காண முடியவில்லை.

சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதல் இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ்5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30 மணியாகும். இது போல் சூரிய அஸ்தமனம் மற்றும் சுப்ஹ் நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுது விட வேண்டும் என்பதே சரியானதாக கருத்தாகத் தோன்றுகிறது.

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 86-89
The original source (Tamizh): https://www.facebook.com/notes/thowheed-translations/tamizh-the-timings-for-the-five-time-prayers/409762756201722/

No comments:

Post a Comment