Tuesday 3 July 2018

TI0097 - Tamizh - Adhan and Iqama (The calls given before prayers)

[உள்ளடக்கங்களின் பட்டியல் - எம்.ஐ.சுலைமானின் நபிவழியில் தொழுகை சட்டங்கள்]

பாங்கு(அதான்) - இகாமத்

கடமையான தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டும்.

“தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் தொழ வைக்கட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ  631 ,   முஸ்லிம்  1194

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றை வெளிப்படுத்தி ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான்..... என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 608,     முஸ்லிம் 633

பாங்கு என்பது தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக உள்ள குறிப்பிட்ட வாசகங்களாகும்.

இகாமத் என்பது கடமையான தொழுகை துவங்குவதற்கு முன் கூறப்படும் குறிப்பிட்ட வாசகங்களாகும்.

பாங்கின் வாசகங்கள்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ்

பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நம்புகிறேன்.

தொழுகையின் பக்கம் வாருங்கள்

தொழுகையின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன்,

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

நூல்: அபூதாவூத் 421

பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது பாங்கு சொல்பவர் வலது புறமும். இடது புறமும் தலையைத் திருப்பியதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்.... பிறகு நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்... அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது இங்கும் அங்குமாக,அதாவது வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 866

பாங்கு சொல்லும் போது பஜ்ர் தொழுகையில் மட்டும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறிய பின்னர் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று இரண்டு தடவை கூற வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களுக்கு பாங்கு சொல்பவனாக இருந்தேன். நான் பஜ்ருடைய பாங்கில் ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று சொன்ன பிறகு அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம், அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்& என்று கூறுபவனாக இருந்தேன்.
அறிவிப்பவர்: அபூமஹ்தூரா (ரலி)
நூல்கள்: நஸயீ 643, அபூதாவூத் 425, அஹ்மத்14834

பாங்கிற்கு முன்னால் ஸலவாத்துச் சொல்வதும் ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி ... என்று துவங்கும் வாசகங்களைக் கூறுவதும் பித்அத் ஆகும். இவ்வாறு சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தரவில்லை.

பாங்கின் அழைப்பிற்குப் பதில் கூறுதல்

பாங்கைக் கேட்பவர்கள் பாங்கிற்குப் பதில் அளிப்பது அவசியமாகும். பாங்கு சொல்பவர் சொல்வதைப் போன்று கூற வேண்டும். ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும் போது மட்டும்

லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றில் ஈடுபடவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது) என்று கூற வேண்டும்.

பாங்கைக் கேட்டால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்று நீங்களும் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
நூல்கள்: புகாரீ 611, முஸ்லிம் 627

பாங்கு சொல்பவர் ‘அல்லாஹு அக்பர்’  என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுங்கள்.... ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’  என்று என்று கூறினால் ‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள். பின்னர் அவர் ‘ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறினால் நீங்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று கூறுங்கள்...  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 629 

பாங்கிற்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

“நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 628

ஸலவாத்தின் வாசகங்கள்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி (பரகத்) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி (பரகத்) செய்வாயாக! நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்".

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரீ 3370

ஸலவாத் கூறிய பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!”

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரீ 614

மேற்கூறப்பட்ட துஆவையோ, அல்லது பின்வரும் துஆவையோ ஓதிக் கொள்ளலாம்.

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லஷரீ(க்)க லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. ரளீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதி(ன்)ர் ரஸூலன் வபில் இஸ்லாமி தீனா

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள். அல்லாஹ்வை அதிபதியாகவும், முஹம்மதை (இறைத்) தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன்.

என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 630

இகாமத்

கடமையான தொழுகையை நிறைவேற்றும் முன்பு இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன.

பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 605, முஸ்லிம் 619

இகாமத்தின் வாசகங்கள்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ் ஸலாஹ்

ஹய்ய அலல் ஃபலாஹ்

கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ்

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ்

மூலம்: நபிவழியில் தொழுகை சட்டங்கள் (Nabivazhiyil Thozhugay Sattangal) book by MI Muhammad Sulaiman, Aug 2015 edition, page 77-85
The original source (Tamizh): 

No comments:

Post a Comment